பாடல் எண் : 9
மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே .
பொழிப்புரை:
பிராண வாயுவை உடல் முழுதும் பரவுமாறு பூரகத்தையும், அந்த வாயுத் தூய்மையாயிருத்தற் பொருட்டு இரேசகத்தையும், நீண்ட வாழ்நாளையும், மிக்க ஆற்றலையும், பெறுதற் பொருட்டுக் கும்பகத்தையும் மேற்கூறிய முறையிற் செய்து பிராணவாயுவை வசப்படுத்தினால், இப்பிறப்பிற்றானே சிவபெரு மானது திருவருளைப் பெறலாம்.
குறிப்புரை:
"பாலாம்" என்பதனை, "பால்போல ஆகின்ற" என விரிக்க. பால் தூய்மைக்கு உவமை. "ஆம்" என்ற பெயரெச்சம், "இரேசகம்" என்னும் ஏதுப் பெயர் கொண்டது. "இரேசகத்தால் உட் பதி வித்து" என்றது, இரேசகம் இல்லாது ஒழியின் கும்பகம் தூய்மை யாகாது என்பதனைப் புலப்படுத்தி, இரேசகத்தின் இன்றியமை யாமையைக் குறித்தது. நெடுங்காலம் வாழ்தலால் 'அமரர்' எனப்படும் தேவர் பலருள்ளும் வாழ்நாள் மிக்கவன் மாயோனாதலின், "மாலாகி" என்றது, நெடுங்காலம் வாழ்தலைக் குறித்தது. "ஆகி" என்னும் ஆக்கச்சொல் உவமை மேல் நின்றது. உலக காரணன் ஆகத்தக்க ஆற்ற லால் நான்முகனை உந்தி வழித்தோற்றுவித்தோனாதல்பற்றி, உந்தித் தானத்தில் கும்பகம் செய்து ஆற்றல் மிகுதற்கும் அவனையே உவமை யாகக் கூறினார். வாங்குதல் - வளைத்தல். "இப்பிறப்பிலே" என்பது ஆற்றலால் கொள்ளக்கிடந்தது. நெடுங்காலம் வாழ வேண்டுதற்குக் காரணம் கூறுவார், "ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே" என்றார்.
இதனால், பூரகம் முதலிய மூன்றின் பயன் வகுத்துணர்த்தப் பட்டது. கும்பகத் தானம் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.
Transliteration:
maelkeezh :naduppakkam mikku'rap pooriththup
paalaam iraesakath thaalud pathiviththu
maalaaki u:nthiyud kumpiththu vaangkavae
aalaalam u'ndaan aru'lpe'ra laamae
Translation:
In Purakam inhale breath deep
To pervade up,
down and middle
In Kumbhakam retain it around the navel centre;
In Rechakam it is absorbed within in due measure
They who practise the Science of Breath thus
Reach the Grace of Lord
Who consumed poison deadly.
No comments:
Post a Comment